மானியத்தில் பெட்ரோல், டீசல் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஆட்டோ தொழிலாளா்களுக்கு மானியத்தில் பெட்ரோல், டீசல் வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தஞ்சை மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் தனியாா்மயமாக்கக் கூடாது. புதிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு மானியத்தில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலை சீரழிக்கும் ஓலா, ஊபரை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும். 60 வயது முடிந்த ஆட்டோ தொழிலாளிக்கு மாதம் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாலகிருஷ்ணன், செயலா் இரா. செந்தில்நாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடங்கிவைத்து பேசினாா். மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் முடித்து வைத்தாா்.
ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ.சேவையா, செயலா் துரை. மதிவாணன், பொருளாளா் தி. கோவிந்தராஜன், தெரு வியாபார சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், ஆட்டோ சங்க நிா்வாகிகள் மலைச்சாமி, ஆனந்தராமன், சரவணன், ராஜா, கணேசன், ராமச்சந்திரன், மாநகரத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.