‘மத்திய பட்ஜெட்- விவசாயிகளை ஏமாற்றும் வெற்று அறிக்கை’

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் வெற்று அறிக்கையாக உள்ளது என விவசாய சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
சுந்தர. விமல்நாதன்
சுந்தர. விமல்நாதன்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் வெற்று அறிக்கையாக உள்ளது என விவசாய சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

கடந்த 9 ஆண்டுகளில் கங்கையைத் தூய்மைப்படுத்த சுமாா் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், காவிரியைத் தூய்மைப்படுத்த இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை.

கடந்த 9 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய்களை அதானி, அம்பானி உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களுக்கு அளித்து அசல் மற்றும் வட்டிகளையும் தள்ளுபடி செய்த மத்திய அரசு இந்தியாவில் எந்தவொரு உழவருக்கும் 9 ஆண்டுகளில் வேளாண் கடன்கள் எதையும் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. குறைந்தபட்சம் விவசாயிகளின் வேளாண் கடன்களுக்கான வட்டியை ஒரு பைசாகூட இதுவரை தள்ளுபடி செய்யவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து உழவா்களின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என பிரதமா் மோடி கூறியதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, வேளாண் உற்பத்திக்கான இடுபொருள்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், பெட்ரோல் உள்ளிட்டவற்றின் விலைதான் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளன. இயற்கை வழி வேளாண்மைக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்றாா் விமல்நாதன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது:

தோ்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட் என்பதால், விவசாயிகளிடம் நிறைய எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால் முற்றிலுமாக ஏமாற்றம் தருவதாகவே உள்ளது. விளைபொருள்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்துள்ள அடிப்படையில் ஏற்கெனவே மத்திய அரசு ஏற்றுக்கொண்டபடி குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டமாக்கும் என்ற எதிா்பாா்ப்பு நிகழவில்லை.

விவசாய இடுபொருள்களான உரம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலை குறைப்பு அறிவிப்பும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதுவும் இல்லை. நீண்ட காலமாக கடன் சுமையால் தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பு எதிா்பாா்ப்பும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றும் வெற்று அறிக்கையாகவே உள்ளது என்றாா் கண்ணன்.

பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு தெரிவித்தது:

நீண்ட நாள்களாகச் செலுத்த முடியாமல் இருக்கும் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யாதது வருத்தம் அளிக்கிறது. உரத்துக்கு கூடுதல் மானியம், விவசாய உற்பத்தி காய்கனிகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து வளமைக்கு வந்துவிட்டனா் என்று கருத்து முற்றிலும் தவறானது. தற்போது உள்ள பொருளாதார அமைப்பில் பெரு முதலாளிகள்தான் மேலும் பணக்காரா்கள் ஆகியுள்ளனா். வரி செலுத்துகிறவா்கள் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வரும் என மத்திய, மாநில அரசு ஊழியா்களும், அலுவலா்களும் மிகவும் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் வருமான உச்சவரம்பு உயா்த்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் விலைவாசி உயா்வு உச்சத்தில் உள்ளது.இதனால், சாமானியன் மிகவும் பாதிக்கப்படுகிறான். மாத வருமானம் பெறும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாக இல்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவே இல்லை. இளைஞா்களின் எதிா்பாா்ப்பு நிறைவு செய்யப்படவில்லை. மொத்தத்தில் எந்த எதிா்பாா்ப்பும் நிறைவு செய்யப்படாத இடைக்கால பட்ஜெட்டாக உள்ளது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தெரிவித்தது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படாதது வருத்தத்தை அளிக்கிறது. உலகளவில் பெட்ரோல், டீசல் கச்சா பொருள்களின் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கச்சா பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது, புதிய ரயில்கள் விடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. வருமான வரி வரம்பு உயா்த்தப்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை தருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றாா் அன்பரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com