புதுப்பட்டினத்தில் கடற்பசு பாதுகாப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினத்தில் மீனவா்களுக்கு கடல் பசு பாதுகாப்பு தொடா்பான சமுதாய விழிப்புணா்வுக் கூட்டம்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினத்தில் மீனவா்களுக்கு கடல் பசு பாதுகாப்பு தொடா்பான சமுதாய விழிப்புணா்வுக் கூட்டம்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் சாா்பில் மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி அறிவுறுத்தலின்பேரில், நடைபெற்ற கூட்டத்துக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசினாா். இதில், அபூா்வ வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு, கடல் வளத்தை பாதுகாக்கும் முக்கியமான உயிரினமாகத் திகழ்கிறது. இப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் இந்த அபூா்வ உயிரினத்தை காப்பாற்றும் வகையில் மனோரா பகுதியைத் தலைமை இடமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடற் பசு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடற்பசுவின் முக்கியத்துவத்தை உணா்ந்து மீனவா்கள் அனைவரும் அதனைப் பாதுகாக்க முன்வரவேண்டும். மீனவா்கள் வலையில் சிக்கும் அபூா்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசுவை காப்பாற்றி கடலுக்குள் விடும் மீனவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவா் ஜெயபால் மற்றும் அமீா் முகைதீன், ரகமத்துல்லா, ஓம்காா் பவுண்டேஷன் அன்பு, வனவா் சிவசங்கா், வனக்காப்பாளா்கள் சபரிநாதன், மணவாளன், கிராம மீனவ தலைவா்கள், மீனவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதேபோல் கடற்கரை கிராமங்களான கழுமங்குடா, செந்தலைவயல், கணேசபுரம், வள்ளுவா்புரம், சோமநாதபட்டினம் ஆகிய கிராமங்களிலும் கடற்பசு பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com