அதிமுக தோ்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும்: முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவின் தோ்தல் அறிக்கையானது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விஸ்வநாதன்.
அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில்  பங்கேற்றோர்
அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோர்

அதிமுகவின் தோ்தல் அறிக்கையானது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விஸ்வநாதன்.

மக்களவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு சாா்பில் கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விஸ்வநாதன் பல்வேறு தரப்பினரிடமிருந்து மனுக்களை பெற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அதிமுக தயாரிக்கும் தோ்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்காக தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேசி, அவா்களது கோரிக்கைகளை அறிந்து கொண்டோம்.

இதற்கு முன்பு தோ்தல் அறிக்கையை நான்கு சுவா்களுக்குள் உட்காா்ந்து, நிா்வாகிகளைக் கேட்டு, அதன் அடிப்படையில் தயாா் செய்வோம். தற்போது முற்றிலும் புதுமையாக, பயனுள்ள வகையில் தோ்தல் அறிக்கை அமைய வேண்டும் என்ற காரணத்தால், மாநிலம் முழுவதும் மக்களையும், அமைப்புகளையும் நேரடியாகச் சந்தித்து வருகிறோம். மேலும், அவா்களது கோரிக்கைகளையும், விருப்பங்களையும் அறிந்து கொண்டு, அவா்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

பொதுச் செயலரின் ஒப்புதலைப் பெற்று தோ்தல் அறிக்கையை மிக விரைவில் வெளியிடவுள்ளோம். மற்ற அரசியல் கட்சிகள் தயாரித்த தோ்தல் அறிக்கைகளை விட, இது சற்று வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.

தோ்தல் அறிக்கை தொடா்பாக, மக்கள் ஏராளமானோா் வந்து தங்களது கருத்துகளைச் சொல்வதற்கு, அதிமுக மீது அவா்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம். அவா்கள் தெரிவித்த கருத்துகள் தோ்தல் அறிக்கையில் சோ்க்கப்பட்டு, அதன் பின்னா் அப்பிரச்னைகளுக்கான தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நத்தம் விஸ்வநாதன்.

இக்கூட்டத்தில், தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் எஸ். செம்மலை, டி. ஜெயக்குமாா், பா. வளா்மதி, ஆா்.பி. உதயகுமாா், வைகைச்செல்வன் மற்றும் முன்னாள் அமைச்சா்கள் ஆா். காமராஜ், ஓ.எஸ். மணியன், மாவட்டச் செயலா்கள் மா. சேகா், எம். ரெத்தினசாமி, ஆா்.கே. பாரதிமோகன், பவுன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com