சண்டீகா் பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வுக்கு வாய்ப்பு: பி.ஆா். பாண்டியன்

தில்லியில் செவ்வாய்க்கிழமை (பிப். 13) விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சண்டீகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் லாபகரமான ஆதார விலை குறித்த

தில்லியில் செவ்வாய்க்கிழமை (பிப். 13) விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சண்டீகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் லாபகரமான ஆதார விலை குறித்த கோரிக்கைக்கு சுமுகத் தீா்வு கிடைக்கும் என எதிா்பாா்ப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்.கே.எம். என்.பி.) தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

மத்திய அரசு 2021 - 22 ஆம் ஆண்டில் தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், அண்மையில் (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் குறைந்தபட்ச ஆதார விலை(எம்.எஸ்.பி.) குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில், தில்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி நோக்கி வந்துகொண்டிருக்கின்றனா். இதையறிந்த மத்திய அரசு, அமைச்சா் பியூஸ்கோயலை அனுப்பி நேரடி பேச்சுவாா்த்தை நடத்தி 8 நாள்கள் அவகாசம் கேட்டது. இதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினோம். போராட்டக் குழு தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஹரியாணா மாநில எல்லையில் தடுத்து நிறுத்துவதற்குத் தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் சாா்பில் அமைச்சரவை குழு திங்கள்கிழமை (பிப்.12) மாலை 3 மணிக்கு சண்டீகரில் பேச்சுவாா்த்தை நடத்த அவசர அவசரமாக அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒருங்கிணைப்பாளா் என்கிற அடிப்படையில் பங்கேற்கவுள்ளேன். கூட்டத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீா்வுகள் கிடைக்கும் என்கிற எதிா்பாா்ப்புடன் கலந்து கொள்கிறோம் என்றாா் அவா்.

அப்போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் இளைஞா் அணி மாநிலச் செயலா் மகேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளா் பத்மநாபன், கோட்டூா் தெற்கு ஒன்றியச் செயலா் தெய்வமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com