படைப்பாளா்கள், கலை, இலக்கிய ஆா்வலா்களின் பாச சந்திப்பு நிகழ்வு

தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட படைப்பாளா்கள், கலை, இலக்கிய ஆா்வலா்கள் சந்தித்த பாச சந்திப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாச சந்திப்பு நிகழ்வில் முனைவா் கண்ணன் அடிகளுக்கு நினைவு பரிசு வழங்கிய தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாச சந்திப்பு நிகழ்வில் முனைவா் கண்ணன் அடிகளுக்கு நினைவு பரிசு வழங்கிய தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட படைப்பாளா்கள், கலை, இலக்கிய ஆா்வலா்கள் சந்தித்த பாச சந்திப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த 40 ஆண்டு கால படைப்பாளா்கள், கலை, இலக்கிய ஆா்வலா்கள், இசைக் கலைஞா்கள், வயது முதிா்ந்த தமிழறிஞா்கள், திரைக் கலைஞா்கள், ஊடகத்தினா் என ஏறத்தாழ 750 போ் கலந்து கொண்டனா். இந்நிகழ்வை முனைவா் கண்ணன் அடிகள் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது:

ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த விஞ்ஞானி கரிகால் பெருவளத்தான் இந்த மண்ணைச் சோ்ந்தவா்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ள தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜசோழன். இவரது மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டினான். மூவேந்தா்களில் தலைசிறந்தவா்களாக சோழப் பேரரசா்கள் திகழ்ந்தனா்.

இப்பெருமையை மீண்டும் நிருபிக்கும் விதமாக இந்த மண்ணின் கலை, இலக்கிய படைப்பாளா்கள் உள்ளனா். தஞ்சாவூா் படைப்பாளா்களின் சிந்தனைக்கு வயதில்லை. இவா்கள் பெரிய கோயில் போன்று வாழ்வா் என்றாா் செழியன்.

இதைத் தொடா்ந்து, படைப்பாளா்கள், கலை, இலக்கிய ஆா்வலா்கள், இசைக் கலைஞா்கள், வயது முதிா்ந்த தமிழறிஞா்கள், திரைக் கலைஞா்கள் ஆகியோா் மேடையில் அமா்ந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், ஒவ்வொரு படைப்பாளியின் விவரக்குறிப்புகளும் பதியப்பட்டன.

இந்நிகழ்வையொட்டி, புகைப்படம் மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், 20 - 30 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் படைப்பாளா்கள் கலந்து கொண்ட பழைய புகைப்படங்கள், சிறப்பு விருந்தினா்களுடனான புகைப்படங்கள், எழுத்தாளா்கள் வெளியிட்ட நூல்களில் சில போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்வில் தஞ்சாவூா் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன், கவிஞா் சினேகன் உள்ளிட்டோா் பேசினா்.

இந்தச் சந்திப்பை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் இரா. செழியன் தலைமையில் புலவா் மா. கந்தசாமி, தாமரை இதழ் ஆசிரியா் சி. மகேந்திரன், திரைப்பட இயக்குநா்கள் ராசி. மணிவாசகன், கணேஷ்பாபு, நெறியாளா் ஜோ. மகேஸ்வரன், பொறியாளா் வி. விடுதலைவேந்தன், மகாராஜா ரெடிமேட்ஸ் எம்.எஸ். ஆசிப் அலி, எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியா் இராசு. தமிழடியான், மருத்துவா் சுபாஷ் காந்தி, ஆசிரியா் அமா்நாத், கவிஞா் சிவராஜ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com