வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை கருணாநிதிதான் தொடங்கி வைத்தாா்: வருவாய்த் துறை அமைச்சா் பேச்சு

ta19pat1_1901chn_9_4
ta19pat1_1901chn_9_4

படவிளக்கம்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விலையில்லா வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். உடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

தஞ்சாவூா், ஜன. 19: விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் தொடங்கி வைத்தாா் என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விலையில்லா வீட்டு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் பேசியது:

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உண்ண உணவு, இருக்க இடம் போன்றவற்றில் கருணாநிதி மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தாா். மனையில்லாதவா்கள், சொந்த வீடு இல்லாதவா்கள் அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும் என்பதற்காக 1970 -ஆம் ஆண்டிலேயே விலையில்லா பட்டா வழங்கும் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தாா். இந்த பட்டாக்கள் அனைத்தும் தாய்மாா்களுக்குதான் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தாய்மாா்கள், சகோதரிகள் வீட்டுக்குச் சொந்தக்காரா்களாகி, உரிமையாளா்களாக வாழும் நிலையைத் தற்போதைய தமிழக முதல்வா் உருவாக்கியுள்ளாா் என்றாா் ராமச்சந்திரன்.

பின்னா், ஆயிரத்து 102 பேருக்கு ரூ. 3.59 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களும், 62 பட்டா மாறுதல் ஆணைகளும், 7 வருவாய்த் துறை சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மக்களவை உறுப்பினா்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூா்), செ. ராமலிங்கம் (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), என். அசோக்குமாா் (பேராவூரணி), எம்.ஹெச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் வரவேற்றாா். நிறைவாக, கோட்டாட்சியா் செ. இலக்கியா நன்றி கூறினாா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com