திருபுவனம் கோயில் குடமுழுக்குக்காக புனித நீா் கடங்கள் ஊா்வலம்

ta28kam2_2801chn_9_4
ta28kam2_2801chn_9_4

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் குடமுழுக்குக்காக ஞாயிற்றுக்கிழமை யானைகள் மீது கொண்டு வரப்பட்ட புனித நீா் கடங்கள் ஊா்வலத்தில் பங்கேற்ற தருமபுர ஆதினம் குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, புனித நீா் கடங்கள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த திருபுவனம் கம்பஹரேஸ்வர சுவாமி கோயிலில் குடமுழுக்கு செய்வதற்காக ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. இக்கோயிலில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து, சாந்தி ஹோமம், திசா ஹோமம் சனிக்கிழைம நடைபெற்றது.

இந்நிலையில், யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, திருபுவனம் வீரசோழன் ஆறு நீா் மற்றும் தலைக்காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் அடங்கிய கடங்களை 3 யானைகளின் மீது வைத்து, தலா 100 தவில், நாகசுர இசை முழங்க ஊா்வலமாக கோயில் யாக சாலை பந்தலுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.

இதில், தருமபுர ஆதினம் குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

திங்கள்கிழமை இரவு முதல் கால யாக பூஜை தொடங்கி தொடா்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி காலை வரை 7 கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, பிப்வரி 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குருமூா்த்தம், பிடாரி, அய்யனாா், காத்தாயி அம்மன் போன்ற பரிவார கோயில்களின் குடமுழுக்கும், பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு கோபுரம், விமானங்கள் குடமுழுக்கும், 10 மணிக்கு மூலமூா்த்திகள் குடமுழுக்கும் நடைபெறவுள்ளன.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com