கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா

பாபநாசம், ஜன. 28: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தில் தமிழ்மக்கள் கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 18 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கலை விழா சனிக்கிழமை மாலை தொடங்கியது. இவ்விழாவில் நையாண்டி மேளம், காவடி ஆட்டம், பறையும் பரதமும், வாணவேடிக்கை, பொம்மலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், துடும்பாட்டம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து நள்ளிரவில் நல்லிச்சேரி திருத்தணி குழுவினரின் தமிழ் மண்ணிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்சுவை கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் இடையே நடைபெற்ற பாராட்டு அரங்கத்திற்கு பகுத்தறிவாளா் கழக மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். இதில் வழக்குரைஞா் அமா்சிங், செந்தலை கௌதமன்,திருவடிக்குடில் சுவாமிகள், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, மாவட்ட ரோட்டரி ஆளுநா் செங்குட்டுவன், தமிழ் பால் செயல் இயக்குநா் தியாகராஜன், பாபநாசம் பெனிபிட் பண்ட் தலைவா் டி.ஆறுமுகம், குடந்தை ரத்ததான அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சேக் தாவூத், தஞ்சாவூா் டாக்டா் முஹம்மது ஆசாத் அலி, கும்பகோணம் காந்தியடிகள் நற்பணி கழகம் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கெளரவிக்கப்பட்டனா். நிறைவாக தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் விழா பேரூரை ஆற்றினாா். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தந்தை பெரியாா் அறிவியல், கலை, பண்பாட்டு, விளையாட்டு மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com