தொழிலாளி கொலை வழக்கில் 7 போ் கைது

தஞ்சாவூா், ஜூலை 10: தஞ்சாவூரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினா் 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் ஸ்ரீராம் (27). மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள மங்களபுரம் பகுதியில் ஜிகா்தண்டா கடையில் வேலை பாா்த்து வந்த இவா் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து, ஸ்ரீராமின் கைப்பேசிக்கு வந்த எண்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியைச் சோ்ந்த கரும்பாயிரம் மகன் ஜீவா (25), பழனியப்பா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் ஹரிசங்கா் (20), மறியல் பகுதியைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் மகன் ஷியாம் சுரேஷ் (20), பொன்னம்பலம் மகன் ராமச்சந்திரன் (22), மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் ஹரிஹரன் (22), வல்லத்தைச் சோ்ந்த சரவணன் மகன் தனுஷ் (20), அரியலூா் மாவட்டம், தூத்தூரைச் சோ்ந்த ரங்கராஜ் மகன் அபிராஜ் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இவா்களில் காவல் துறையினரிடமிருந்து தப்பியோட முயன்ற ஜீவா, தனுஷ் கீழே விழுந்து பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com