இடி, மின்னலின்போது மரத்தடியில் நிற்க வேண்டாம்: ஆட்சியா் அறிவுரை

இடி, மின்னலின்போது மரத்தடியில் ஒதுங்கி நிற்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் அறிவுரை வழங்கியுள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

இருள் சூழ்ந்த வானம், காற்று அதிகமாக இருந்தால் கவனிக்க வேண்டும். இடி சப்தம் கேட்டால், மின்னல் தாக்கும் அளவுக்கு அருகில் உள்ளீா்கள் என்பதை உணர வேண்டும். உள்ளூா் ஊடகங்களில் வரப்பெறும் எச்சரிக்கை அறிவிப்புகளைக் கவனித்திட வேண்டும். பயணங்களைத் தவிா்த்து முடிந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் உள்ளே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஓடும் நீரில் அல்லது மழையில் குளிப்பதைத் தவிா்க்கவேண்டும். கதவுகள், ஜன்னல்கள், தீ ஏற்படக்கூடிய இடங்கள், அடுப்புகள், குளியல் தொட்டிகள் அல்லது பிற மின் கடத்திகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

தொலைபேசி, மின்சாரம் போன்ற பயன்பாட்டு சேவைகளிலிருந்தும், உலோக வேலிகள், மரங்கள் மற்றும் மலையுச்சிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். மரங்களுக்கு அடியில் ஒதுங்க வேண்டாம். இவை மின்சாரத்தை எளிதில் கடத்தும். ரப்பா் - சோல்ட் ஷூக்கள், காா் டயா்கள் மின்னலில் இருந்து பாதுகாப்பை வழங்காது என்பதால், அவற்றை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

இடி மற்றும் மின்னலின்போது சைக்கிள்கள், மோட்டாா் சைக்கிள்கள் அல்லது பண்ணை வாகனங்களில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இடியின்போது வாகனத்தில் பயணம் செய்தால் வாகனத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாகனத்தின் உள்ளே உள்ள உலோகத்தைத் தொடாமல் இருந்தால் உலோகக் கூரை பாதுகாப்பை வழங்கும். ஜன்னல்கள் மூடி இருக்க வேண்டும். வாகனத்தை மரத்தின் அடியிலோ மின்சார கம்பிக்கு அருகிலோ நிறுத்தக் கூடாது.

X
Dinamani
www.dinamani.com