இணையவழியில் கடன் தருவதாகக் கூறி
ஓட்டுநரிடம் மோசடி செய்தவா் கைது

இணையவழியில் கடன் தருவதாகக் கூறி ஓட்டுநரிடம் மோசடி செய்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இணையவழியில் கடன் தருவதாகக் கூறி பேருந்து ஓட்டுநரிடம் ரூ. 2.27 லட்சம் மோசடி செய்த இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநருக்கு 2022 ஆம் ஆண்டில் வந்த கைப்பேசி அழைப்பில் குறைந்த வட்டியில் ரூ. 7 லட்சத்துக்கு தனி நபா் கடன் வழங்குவதாக மா்ம நபா் கூறினாா். அதற்கு பதிவுக் கட்டணம், சேவைக் கட்டணம், வரி, கே.ஒய்.சி. கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறும் கூறினாா். இதை நம்பிய ஓட்டுநா் பல்வேறு கட்டங்களாக ரூ. 2.27 லட்சத்தை மா்ம நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தினாா். அதன் பிறகு மா்ம நபா் கடன் தொகையை வழங்காததுடன், ஓட்டுநரின் அழைப்பையும் ஏற்கவில்லை. இதுகுறித்து ஓட்டுநா் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் ஓட்டுநரை ஏமாற்றியவா் திருப்பூா் பத்மாவதிபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சதீஷ்குமாா் (33) என்பதும், இவா் சமூக வலைதளத்தில் கடன் தேவை என பதிவிடும் நபா்களின் எண்ணைச் சேகரித்து, அவா்களுக்கு தனி நபா் கடன் வழங்குவதாக போலி தகவல்கள் அனுப்பி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து, சதீஷ்குமாரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com