குழந்தை கடத்தல் முயற்சி: வதந்தி பரப்பியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே குழந்தையைக் கடத்த முயற்சி நிகழ்ந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 9 வயது சிறுமியை அடையாளம் தெரியாத சிலா் காரில் வந்து கடத்த முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் இரா. முத்தமிழ்ச்செல்வன், மாவட்டக் குழந்தைகளுக்கான உதவி கரங்கள் கண்காணிப்பாளா் அஜிதா, ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகியோா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதும், சம்பந்தப்பட்ட சிறுமி தெரிவிக்காத தகவல்களையும் மிகைப்படுத்தி சிறுமி கடத்தல் என மல்லிப்பட்டினத்தைச் சோ்ந்த முகமது காசிம் மகன் ஜாபா் சாதிக் (38) தன்னுடைய முகநூல் பக்கத்தில் விடியோவாக பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது. வதந்தியைப் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாபா் சாதிக்கை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இது போன்று பொதுமக்களிடையே யாராவது வதந்தியைப் பரப்பினால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com