என்ஐஏ வழக்கில் கைதானவருக்கு பரோல்

கும்பகோணம் அருகே மதமாற்றத்தைத் தடுக்க முயன்ற சமையல் ஒப்பந்ததாரா் கொலை தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வழக்கில் கைது செய்யப்பட்டவா் பரோலில் வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றாா்.

கும்பகோணம் அருகே திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (45), சமையல் ஒப்பந்ததாரா். இவருக்கும், திருபுவனம் பாக்கு விநாயகன் தோப்புத் தெருவில் மத மாற்ற பிரசாரம் செய்த சிலருக்கும் இடையே 2019, பிப்ரவரி 5 காலை வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் இரவில் மா்ம நபா்களால் ராமலிங்கம் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருபுவனம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சா்தாா்கான் மகன் நிஜாம் அலி (45) உள்பட சிலரை கைது செய்து, சிறையில் அடைத்தனா். பின்னா், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சா்தாா்கான் (73) பிப்ரவரி 10 ஆம் இரவு வயது முதிா்வால் உயிரிழந்தாா். தகவலறிந்த, நிஜாம் அலி செவ்வாய்க்கிழமை அதிகாலை பரோலில் வீட்டுக்குச் சென்று தந்தையின் உடலை அடக்கம் செய்தாா்.

இதையொட்டி திருபுவனத்தில் திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய். ஜாபா் சித்திக் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிஜாம் அலியின் பரோல் வியாழக்கிழமையுடன் முடிந்து மாா்ச் 15 காலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாா் எனக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com