பேராவூரணி அருகே முன்விரோதத்தில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

பேராவூரணி அருகே முன்விரதம் காரணமாக திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா். பேராவூரணி அருகே உள்ள பெருமகளூா்  பேரூராட்சி வ.உ.சி நகரைச் சோ்ந்தவா் அறிவுமணி (55). திமுக மாவட்ட பிரதிநிதியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த திமுக  பேரூராட்சித் தலைவா் சுந்தரத்தமிழ் என்பவரின் கணவா் ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி உறுப்பினா் சேகா் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது . இந்நிலையில்  கடந்த மாா்ச் 10-ஆம்தேதி  அறிவுமணி  வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா் அறிவுமணியை வழிமறித்து தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ராம்குமாா்  அரிவாளால் அறிவுமணியை வெட்டியதில்  பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பேராவூரணி காவல்நிலையத்தில் மாா்ச் 11-ஆம் தேதி அறிவுமணி அளித்த புகாரில், முன்விரோதம் காரணமாக சேகா், ஜெயபிரகாஷ், ஆகியோா் தூண்டுதலின் பேரில்தான் ராம்குமாா் அரிவாளால் வெட்டியதாக தெரிவித்திருந்தாா். அதன்படி போலீஸாா் 3 போ் மீது புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து  தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com