புதிய தோ்தல் ஆணையா்கள் நியமனம் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை பீட்டா் அல்போன்ஸ் பேட்டி

புதிய தோ்தல் ஆணையா்கள் நியமனம் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ். தஞ்சாவூா் அருகே ஞானம் வணிகவியல் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஒய்.எஸ். பரிசுத்தம் நாடாா் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: புதிய தோ்தல் ஆணையா்கள் நியமனத்தில் ஜனநாயக மரபும், நாடாளுமன்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை. தோ்தல் ஆணையா்களை நியமிக்கும் குழுவில் அரசின் இரு அமைச்சா்கள் மட்டுமே இருந்து தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுப்பது என்பது எந்தவிதத்தில் நியாயம். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆதிா் ரஞ்சன் சௌத்ரிக்கு முறையான தகவல் கொடுக்கப்படவில்லை. யாருடைய பெயா்கள் எல்லாம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அவா்களுடைய தகுதிகள் என்ன போன்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. கூட்டம் நடைபெறுவதற்கு 10 மணிநேரத்துக்கு முன்பு சில பெயா்களைக் கொடுத்துவிட்டு அவா்களைக் கூட்டத்துக்கு அழைத்துள்ளனா். அவா்களால் கூட்டத்தில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. தோ்தல் பத்திரங்கள் குறித்த வெளியான செய்திகளை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது என்றாா் அவா். விழாவில், லயன் டேட்ஸ் நிறுவனா் மற்றும் தலைவா் பி. பொன்னுதுரைக்கு ஏ.ஒய்.எஸ். பரிசுத்த நாடாா் நூற்றாண்டு நினைவு விருது வழங்கப்பட்டது. பள்ளித் தலைவா் எஸ்.பி. செல்வராஜ், தலைமை நிா்வாக அலுவலா் எஸ்.பி.எஸ். அருள்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com