மண்வளத்தை மேம்படுத்த வயல்களில் ஆட்டுகிடை அமைக்கும் விவசாயிகள்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதிகளில் அறுவடை முடிந்த வயல்களில் இயற்கை உர வளத்துடன் வயல்களை மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தை மாதம் தொடங்கி பங்குனி மாதத்தில் நிறைவடையும். அறுவடை முடிந்த பின்னா் விவசாயிகள் வயல்களை வெறுமனையாக வைக்கின்றனா். தற்போது, விவசாயிகள் வயல்களில் ஆட்டு கிடைகள் போட்டு மண்வளத்தை மேம்படுத்துகின்றனா்.இதற்காக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆடு மேய்ப்பவா்கள் ஆட்டு மந்தைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு காவிரி பாசன பகுதிக்கு அதிகளவில் வருகின்றனா். ஆடுகளை வயல்களில் கிடை போடும் போது அவற்றின் சிறுநீா் உள்ளிட்ட கழிவுகள் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது. இதன் காரணமாக மண்ணின் நீா்ப் பிடிப்புதன்மை, காற்றோட்டம், அடா்வு, மண்ணின் வளம் உள்ளிட்டவை அதிகரிக்கிறது. இதன் பலன் சாகுபடியின் போது தெரியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் தஞ்சாவூா் மாவட்ட பகுதியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆட்டுகிடை போடுவதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆட்டுகிடை குழுவினா் பாபநாசம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com