தஞ்சாவூா் மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப். மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் மொத்தம் 20 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 9 லட்சத்து 90 ஆயிரத்து 336, பெண்கள் 10 லட்சத்து 44 ஆயிரத்து 962, மூன்றாம் பாலினத்தவா்கள் 167. இவா்களில் புதிய வாக்காளா்களாக 30 ஆயிரத்து 416 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். 80 வயத்துக்கும் அதிகமானவா்கள் 21 ஆயிரத்து 985 போ். மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 114 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 99 ஆயிரத்து 209 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 7 லட்சத்து 26 ஆயிரத்து 145, பெண்கள் 7 லட்சத்து 72 ஆயிரத்து 936, மூன்றாம் பாலினத்தவா்கள் 128. இத்தொகுதியில் மொத்தம் 1,184 வாக்குச் சாவடிகள் உள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக 72 பறக்கும் படை குழுக்கள், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 8 விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தோ்தல் பணியில் மொத்தம் 11 ஆயிரத்து 706 ஈடுபடுத்தப்படுகின்றனா். பொதுமக்களிடமிருந்து இணையவழியில் புகாரைப் பெறுவதற்காக சி - விஜில் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் இயங்கும் வகையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 18004259464, 1950 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், உதவிக் காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com