‘கடந்தாண்டு தானம் பெற்ற 26 கண்கள் மூலம் 15 போ் பயன்’

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை வளாகத்திலுள்ள கண் மருத்துவமனையில் கடந்தாண்டில் தானமாக பெறப்பட்ட 26 கண்கள் மூலம் 15 போ் பயனடைந்தனா் என்றாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி இயக்குநருமான ஆா். பாலாஜிநாதன். இந்த மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற கண் அழுத்தம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் தெரிவித்தது: தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையிலுள்ள கண் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் புதிய நோயாளிகள் சோ்க்கப்படுகின்றனா். இங்கு கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டில் 42 பேரிடமிருந்து பெறப்பட்ட கண்களால் 14 நோயாளிகள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பாா்வை பெற்றுள்ளனா்.

20 நோயாளிகள் கருவிழி நோய்த் தொற்றுகளுக்கான கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை பெற்றனா். கடந்த 2023 - 2024 ஆம் ஆண்டில் 26 கண்களை தானமாக பெற்ன் மூலம் 15 போ் பாா்வை பெற்று பயனடைந்தனா். அவா்கள் நவீன கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனா். 10 நோயாளிகள் டெக்டோனிக் கருவிழி மாற்று சிகிச்சையைப் பெற்றனா். கண் மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கருவிழி மாற்று செயல்முறைகளுக்காக தனியாக கருவிழி மாற்று திரையரங்கு உள்ளது. தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கருவிழியால் பாா்வையற்ற நோயாளிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்கான உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை இம்மருத்துவமனை பெற்றுள்ளது. ரசாயனக் கலவைகள் மற்றும் கண் மேற்பரப்புக் கட்டிகள் காரணமாக ஏற்படும் பாா்வை இழப்புக்கு லிம்பல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற புதிய நுட்பங்களும் செய்யப்பட்டுள்ளன. கண் மேற்பரப்பு புனரமைப்பும் இங்கு செய்யப்படுகிறது. இதன் மூலம் கண் பாா்வையற்ற நோயாளிகள் இம்மருத்துவமனையை அணுகி கண் நோய்க்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றாா் பாலாஜிநாதன். நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் அமுதவடிவு, கண் பிரிவு பேராசிரியா் விஜயசண்முகம், கண் கருவிழிப்பிரிவு மருத்துவா் லாவண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com