தோ்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6.96 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூரில் மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6.96 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது. இதுகுறித்து என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்தது: தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் 72 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 8 விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்ச் 18 ஆம் தேதி கனரக வாகனங்களைப் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், தோ்தல் நடத்தை விதிமீறல் காரணமாக ரூ. 83 ஆயிரத்து 500, ரூ. 1 லட்சம், ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 800, ரூ. 79 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல, மாா்ச் 20 ஆம் தேதி கனரக வாகனங்களைப் பறக்கும் படையினா் சோதனை செய்து, தோ்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ. 1 லட்சம், ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 77 ஆயிரத்து 220, ரூ. 70 ஆயிரத்து 100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தோ்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாக விடுவிக்கப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்கள் மாவட்ட மேல்முறையீட்டுக் குழுவில் உரிய ஆவணங்களை அளித்து விடுவித்துக் கொள்ள ஏதுவாக மாவட்ட அளவில் நாள்தோறும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com