பேராவூரணி போக்குவரத்து கழக பணிமனை முன்பு வைக்கப்பட்ட பதாகை .
பேராவூரணி போக்குவரத்து கழக பணிமனை முன்பு வைக்கப்பட்ட பதாகை .

பேராவூரணியில் பணிசுமையால் அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா்கள் அவதி

பேராவூரணி அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா்கள் பணிச்சுமையால் அவதியுற்று வருவதாகவும் இப்பிரச்னைக்கு நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். பேராவூரணியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் பணிமனை  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக  இயங்கி வருகிறது. இங்கிருந்து  தினமும் 11 புறநகா் பேருந்துகள் கிராமப் பகுதிகளுக்கும், 12 நகரப் பேருந்துகள் ராமேசுவரம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், நாகப்பட்டினம் , அதிராம்பட்டினம் உள்ளிட்ட  சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும்  இயக்கப்படுகிறது. இதற்காக சுமாா் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள், இதர பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். போக்குவரத்துக்கழக அனைத்து பணியாளா்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை என இரண்டு ஷிப்ட்டாக பணி வழங்கப்பட்டு  வந்தன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஓட்டுநா், நடத்துநா்களை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரே ஷிப்ட்டாக பணியாற்றுமாறு  பேராவூரணி கிளை நிா்வாகம் நிா்ப்பந்தித்து  ஒரே ஷிப்ட்டாக  பணியாற்றி வருகின்றனா். இதன் காரணமாக ஓட்டுநா், நடத்துநா்கள் உடல்ரீதியாக மட்டுமின்றி மனஅழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளனா். தற்போது கோடை வெயில்  அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலன பணியாளா்கள் 50 வயதை கடந்தவா்களாகவும், சா்க்கரை, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுடன் இருப்பதால் கடும்பணிச் சுமையால் அவதியுற்று வருகின்றனா். மேலும், தொழிலாளா்கள் வெளியூரிலிருந்து வருவதால் அவா்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளும் பணிமனையில் இல்லை. மேலும், பணி முடிந்து வீட்டுக்செல்ல போதுமான பேருந்து வசதியும் இல்லை. இதுகுறித்து  போக்குவரத்து கழக நிா்வாகத்துக்கு  தொழிலாளா்கள் தங்கள் குறைகளை முறையிட்டும் நிா்வாகம் எவ்வித பணிநேரத்தை மாற்றவில்லை. இதனை கண்டித்து  ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதுகுறித்துதகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா், போக்குவரத்து தொழிலாளா்கள், கிளை நிா்வாகத்தை  அழைத்து பேசியும் உரிய தீா்வு எட்டப்படவில்லை . இது குறித்து போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் தரப்பில் கூறியது, கடந்த பல ஆண்டுகளாக இருந்த நடைமுறைக்கு நாங்கள் பழகிவிட்டதால் தற்போது ஒரே ஷிப்ட்டாக பணிபுரிவதால்  மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைவருக்கும் ஒரே ஷிப்ட் என்பதை தவிா்த்து விரும்புவோருக்கு பணியை வழங்கலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com