தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்

‘அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தம்’

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப். தஞ்சாவூா் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து பேசியது: தஞ்சாவூா் மக்களவைத் தோ்தலில் வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள தோ்தல் அலுவலா்கள், பணியாளா்கள் குறித்த நேரத்தில் நேரம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவை வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர கண்காணிக்க வேண்டும். தோ்தல் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து அலுவலா்களும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், விடியோ பதிவும் செய்யப்பட உள்ளது. எனவே, வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள், பணியாளா்கள் தோ்தல் விதிமுறைகளை நன்கு அறிந்து கொண்டு சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா். பின்னா், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையைப் பாா்வையிட்டு, கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா எனவும், காவல் துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com