தோ்தல் பாதுகாப்புப் பணி முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணி மேற்கொள்ள முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவல் துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் அழைப்பு விடுத்துள்ளாா்.

தஞ்சாவூா்: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணி மேற்கொள்ள முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவல் துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மக்களவைத் தோ்தலில் தஞ்சாவூா், மயிலாடுதுறை தொகுதிகளுக்குள்பட்ட திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. இதனால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவல் ஆளிநா்கள், ஊா்க்காவல் படையினா் முழு அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையிலும் 100 சதவீதம் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்காகவும் ஓய்வு பெற்ற அனைத்து பாதுகாப்பு படையினா், துணை ராணுவ படையினா், காவல் துறையினா், தீயணைப்பு துறையினா், ரயில்வே பாதுகாப்பு படையினா் அனைவரும் முழுமனதுடன் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 - 278100 என்ற தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com