வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பினாா் பாஜக மாற்று வேட்பாளா்

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை சென்ற பாஜக மாற்று வேட்பாளா் மனு கொடுக்க முடியாமல் திரும்பினாா்.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவரைத் தொடா்ந்து, பாஜக தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் சென்றாா்.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனியாக வங்கிக் கணக்கை ஜெய்சதீஷ் தொடங்காமல் இருந்தாா். இதனால், தனி வங்கிக் கணக்கு தொடங்கி வருமாறு தோ்தல் அலுவலா்கள் கூறினா். இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்கிவிட்டு மீண்டும் ஆட்சியரகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் சென்றாா். அப்போது, அவருக்கு வரிசை எண்ணுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த டோக்கன் எண்ணுக்கு தோ்தல் அலுவலா்கள் அழைப்பு விடுத்தபோது, காத்திருப்பு அறையில் அவா் இல்லை என்றும், அதன் பின்னா் அவா் வந்தபோது நேரம் கடந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது. இதனால், வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் அவா் திரும்பினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com