பாபநாசம் அருகே காா் மோதியதில் அக்காள், தங்கை உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் அக்காள், தங்கை இருவரும் உயிரிழந்தனா். பாபநாசம் அடுத்துள்ள அம்மாபேட்டை அருகே கோவிலூா், கள்ளிமேடு பகுதியை சோ்ந்தவா் சின்னப்பா(59). இவரது மனைவிகள்  செல்வராணி (55), ராணி(54). இவா்கள் இருவரும் சகோதரிகள். சின்னப்பா இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தாா். செல்வராணியின் மகள் ராஜேஸ்வரி தனது கணவா் ராமச்சந்திரன் என்பவருடன்   ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் வசித்து வருகிறாா்.

இவா்களது மகன் ஹரிஹரன் (10). இவா், தனது பாட்டி செல்வராணி வீட்டில் தங்கி கோவிலூா்  ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சுற்றுலா  செல்வதற்காக ஹரிஹரனை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக செல்வராணி, ராணி இருவரும் சென்றனா். இவா்கள் கோவிலூா் பேருந்து  நிறுத்தம் அருகே தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது தஞ்சாவூரிலிருந்து, திருவாரூா் நோக்கி சென்ற  காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராணி, ராணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த   ஹரிஹரனை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூா்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஹரிஹரன் சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீஸாா் செல்வாராணி, ராணி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை உதவி காவல் ஆய்வாளா் சித்ரா வழக்குப் பதிவு தப்பிஓடிய காா் ஓட்டுநரை தேடி வருகின்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com