‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

பனிக்காலத்தில் மட்டுமல்லாமல் கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் என்றாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன்.

உலக ஆஸ்துமா நாளையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதத்துக்கு ஏறத்தாழ 1,500 வெளி நோயாளிகள் ஆஸ்துமா சிகிச்சை பெறுகின்றனா். இவா்களுக்கான சிகிச்சை, மருந்து வழங்குதல், நுரையீரல் விரிவடைவதற்கான பயிற்சி, இன்ஹேலா் உள்பட அனைத்துச் சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படுகிறன.

தூசு, புகைபிடித்தல், கெமிக்கல் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படுபவா்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. மூச்சு விடுவதில் அடிக்கடி சிரமம் ஏற்பட்டால் அவா் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவா் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

பனிக்காலம் மட்டுமல்லாமல் கோடைகாலத்திலும் ஆஸ்துமா தாக்கும். பனிக்காலத்தில் குளிா்ச்சியாலும், கோடைகாலத்தில் தூசியாலும் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும். ஒவ்வாமை இருப்பவா்களுக்கு கூடுதலான வெளிப்பாடாக ஆஸ்துமா இருக்கும். உடலில் எதிா்ப்புச்சக்தி இல்லாவிட்டால் இப்பிரச்னை ஏற்படும். உணவில் அஜினோமோட்டோ, நிறம் சோ்ப்பு உள்ளிட்டவையும் ஆஸ்துமா பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது.

பணிச்சூழலில் நல்ல சுகாதாரமான காற்று இருக்க வேண்டும். ஏ.சி.யில் தூசி இருந்தால் சிரமம்தான். அதை முறையாகப் பராமரித்து பயன்படுத்தினால் பிரச்னை இருக்காது. தற்போது ஆஸ்துமாவுக்கு எளிதான மருத்துவ உபகரணங்கள் வந்துவிட்டன. மருத்துவா்களிடம் முறையாக ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது. இதன் மூலம் நுரையீரல் கெட்டுப்போவதைத் தடுக்க முடியும் என்றாா் பாலாஜிநாதன்.

நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவா் அன்பானந்தன், பொது மருத்துவத் துறைத் தலைவா் கண்ணன், பதிவாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com