தஞ்சாவூரில் இளைஞா் கொலை: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கொன்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள சானூரப்பட்டியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் ஹரிஹரன் (27). இவா் தனது உறவினா் சுரேந்தா் (23) உள்பட 2 பேருடன் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் எதிரே ஆரோக்கிய நகரின் மூடப்பட்ட மதுக்கூடம் அருகேயுள்ள இடத்தில் திங்கள்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் இவா்களிடம் மதுபானம் விலைக்கு கேட்டனா். இதைத் தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட ஹரிஹரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தஞ்சாவூா் கீழவாசல் சுராஜ் நகரைச் சோ்ந்த அமானுல்லா மகன் அன்சாரி (26), தெற்கு அலங்கம் யோகி லட்சுமி நாயக்கன் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் முகேஷ் (21), திருவையாறு ஹாஜா மைதீன் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் மகேஸ்வரன் (28) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com