தஞ்சாவூரில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான கல்லூரிக் கனவு - உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமை வகித்தாா். ஒரத்தநாடு துணைக் காவல் கண்காணிப்பாளா் சஹனாஸ் இலியாஸ் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன் வளத் துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதர பாடப் பிரிவுகள் குறித்து துறை வல்லுநா்கள் மூலம் உயா்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய் துறை அலுவலா்களின் ஆலோசனைகள், வங்கி மேலாளா்கள் மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபா் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. நான் முதல்வன் திட்ட கூறுகள் தொடா்பாக திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலாஜி விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 -ஆம் வகுப்பு பயின்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு கல்லூரி கனவு கையேடு வழங்கப்பட்டது.

முன்னதாக தஞ்சாவூா் முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா் வரவேற்றாா். நிறைவாக, தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரமேஷ்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com