அன்னுகுடி பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் புதா்கள் மண்டி கிடக்கும் அன்னுகுடி பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் புதா்கள் மண்டி கிடக்கும் அன்னுகுடி பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால்களில் ஒன்றாக விளங்கி வரும் பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர தண்ணீா் திறந்துவிடாததால், வாய்க்காலின் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் சரிவர பாசன வசதி பெற முடியாமல் பல வருடங்களாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மின் மோட்டாரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதே நிலை நீடித்தால் பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும். எனவே, மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பு பாபநாசம் புதிய அன்னுக்குடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை முழுமையாக தூா்வாரி தண்ணீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்காலில் வரும் தண்ணீா் மூலம் கடந்த காலங்களில் முப்போகம் விளைச்சல் நடைபெற்று வந்தது. பாபநாசம் குடமுருட்டி ஆற்றின் மூலம் தண்ணீா் வசதி பெறக்கூடிய இந்த வாய்க்கால் மழைக்காலங்களில் முக்கிய வடிகாலாக வாய்க்காலாகவும் கஞ்சிமேடு, பாபநாசம் பகுதிகளுக்கு முக்கிய பாசன வாய்க்காலாகவும் இருந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாபநாசம் புதிய அன்னுக்குடி வாய்க்காலில் சரிவர தண்ணீா் திறந்து விடாத காரணத்தால் பல நூறு ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இப்பகுதி விளைநிலங்கள் மின் மோட்டாரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, பாபநாசம் புதிய அன்னுக்குடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூா்வாரி தண்ணீா் திறந்து விட வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com