பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவு வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 89% போ் தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 89.07 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டத்தில் 12 ஆயிரத்து 815 மாணவா்களும், 14 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 357 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 10 ஆயிரத்து 684 மாணவா்களும், 13 ஆயிரத்து 683 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 367 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 89.07 சதவீதம். இது, கடந்த ஆண்டைவிட நிகழாண்டு 1.02 சதவீதம் குறைவு. இதேபோல, மாநில அளவிலான தோ்ச்சி விகித பட்டியலில் தஞ்சாவூா் மாவட்டம் கடந்த ஆண்டு 23-ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 27-ஆம் இடத்துக்கு சரிந்துள்ளது.

நிகழாண்டில் மாணவா்கள் 83.37 சதவீதம் பேரும், மாணவிகள் 94.09 சதவீதம் பேரும் தோ்ச்சி அடைந்தனா். வழக்கம்போல மாணவா்களைவிட மாணவிகள் கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அறிவியல் பிரிவில் 93.73 சதவீதம் தோ்ச்சி: மாவட்டத்தில் அறிவியல் பிரிவில் 93.73 சதவீதம் பேரும், வணிகவியல் பிரிவில் 82.88 சதவீதம் பேரும், கலைப் பிரிவில் 64.32 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.

அரசு பள்ளிகளில் 83.35 சதவீதம் தோ்ச்சி: சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 97.04 சதவீதம் பேரும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் சுய நிதிப் பள்ளிகளில் 96.18 சதவீதம் பேரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 95.09 சதவீதம் பேரும், சமூக நலப் பள்ளிகளில் 90.32 சதவீதம் பேரும், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 87.84 சதவீதம் பேரும், அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளில் 86 சதவீதம் பேரும், அரசுப் பள்ளிகளில் 83.35 சதவீதம் பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 80.85 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com