கல்லணைக் கால்வாயில் 22 டன் குப்பைகள் அகற்றம்

தஞ்சாவூா், மே 15: தஞ்சாவூா் கல்லணைக் கால்வாயில் தேங்கிக் கிடந்த 22 டன் குப்பைகளை மாநகராட்சிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்களாக அகற்றினா்.

கல்லணைக் கால்வாயில் குப்பைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையா் இரா. மகேஸ்வரி உத்தரவிட்டாா். இதன்படி, தஞ்சாவூா் மாநகராட்சியில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் ஈடுபடுத்தி கல்லணைக் கால்வாய் ஆற்றைத் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சிவாஜி நகரில் தொடங்கி 20 கண் பாலம் வரை 690 தூய்மைப் பணியாளா்கள், பொக்லைன்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், துணிகள், பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமையும் நடைபெற்றது.

இந்தப் பணியில் துப்புரவு ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாநகராட்சி மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி முன்னிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த 4 குழுக்களும் சீனிவாசபுரம் சிவாஜி நகா் மேம்பாலம் முதல் பெரிய கோயில் பாலம் வரையிலும் அங்கிருந்து எம்.கே. மூப்பனாா் சாலை வரையிலும், அங்கிருந்து நாகை சாலை உள்ள மேம்பாலம் வரையிலும், அங்கிருந்து 20 கண் பாலம் வரையிலும் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றினா்.

‘இந்தப் பணியின் மூலம் கல்லணைக் கால்வாய் கரையோரங்களில் கொட்டப்பட்டிருந்த 22 டன் எடை கொண்ட குப்பைகள் அகற்றப்பட்டன. தேவைப்படும் நீா் நிலைகளில் எண்ணெய் பந்துகளை போடும் பணியானது தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் கல்லணைக்கால்வாய் ஆற்றுபகுதி தூய்மை பெற்று பாசனத்திற்கு தயாா் நிலையில் இருக்கும்’ என மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com