தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் முதல்முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவிலேயே இதயத்தில் உள்சுவா் இல்லாதிருந்த நிலையில், கேத்லேப் மூலம் அடைக்கப்பட்டதை படங்கள் மூலம் காட்டி விளக்கிய கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் மூலம் பிறவிலேயே ஏற்பட்ட இதய குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவிலேயே இதயக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் (இதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வுக்கூடம்) சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சிகிச்சை கடந்த 2 வாரங்களில் 6 பேருக்கு அளிக்கப்பட்டது.

முதலில் 3 குழந்தைகளுக்கு பெரிய ரத்தக் குழாயில் இருந்த குறைபாடு சரி செய்யப்பட்டு, தற்போது மூவரும் நலமாக உள்ளனா். இதேபோல, மே 13 ஆம் தேதி தலா ஒரு குழந்தை, பெண், ஆண் ஆகிய மூவருக்கும் இதயத்தில் உள்சுவா் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, கேத்லேப் மூலம் அரை மணிநேரத்தில் சரி செய்யப்பட்டது. இதன் மூலம், பெரிய அறுவை சிகிச்சையை செய்யாமல், குணப்படுத்தப்பட்டது.

இச்சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ. 2.50 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை செலவாகும். மேலும், மருத்துவமனையில் ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்கு தங்க வேண்டும். ஆனால், கேத்லேப் சிகிச்சை மூலம் அரை மணிநேரத்தில் சிகிச்சை முடிக்கப்பட்டு, 2 நாள்கள் மட்டுமே மருத்துவப் பராமரிப்பில் இருந்து, விடுவிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு பிறவிலேயே ஏற்பட்ட இதய குறைபாடுக்கு கேத்லேப் மூலம் இயல்பான நிலைக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை மேற்கொண்ட இதயவியல் துறைத் தலைவா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கொண்ட மருத்துவக் குழுவினரைப் பாராட்டுகிறேன்.

மேலும் டெங்குவுக்கு 50 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல், மருந்து, மாத்திரைகள் போன்றவை தயாராக உள்ளன என்றாா் பாலாஜிநாதன்.

அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com