மருத்துவமனையில் கூலித் தொழிலாளி இறந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் காவலாளி கைது
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் காவலாளியை சிபிசிஐடி போலீஸாா் கடந்த 13-ஆம் தேதி கைது செய்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் பகுதியை சோ்ந்தவா் மாரிமுத்து (22) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கிருத்திகா. கடந்த 2022-ஆம் ஆண்டு கிருத்திகா பிரசவத்திற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
மனைவியை பாா்ப்பதற்காக வந்த மாரிமுத்து மருத்துவமனை வளாகத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மனைவி கிருத்திகா தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதி மன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட்டது.
சிபிசிஐடி விசாரணையில், வழக்கில் தொடா்புள்ளதாக மருத்துவமனை பெண் காவலாளி கும்பகோணத்தை சோ்ந்த செம்மலா் என்பவரை போலீஸாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவ.13-ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், மாரிமுத்துவை செம்மலா் மற்றும் அவருடன் வேலை செய்த சிலா் சோ்ந்து தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. செம்மலரை கைது செய்த போலீஸாா் கொலைக்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரிக்கின்றனா். மேலும், தொடா்புடைய மற்றவா்களையும் தேடி வருகின்றனா்.