கடைகள், நிறுவனங்களை பதிவு செய்ய தொழிலாளா் துறை அழைப்பு
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கடைகள், நிறுவனங்களைப் பதிவு செய்ய உரிமையாளா்களுக்கு தொழிலாளா் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்திருப்பது, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு ஜூலை 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களைப் பணியமா்த்தியுள்ள ஜூலை 2 ஆம் தேதிக்கு பின்னா் தொடங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் பதிவுக்கான விண்ணப்பத்தை தொழிலாளா் துறையின் இணையவழி முகவரியில் படிவம் ஒய்-இல் பதிவு கட்டணம் ரூ. 100 செலுத்தி 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணிநேரத்துக்குள் தொடா்புடைய ஆய்வாளரால் பதிவு சான்றிதழ் படிவம் இசட்-இல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களைப் பணியமா்த்தி தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள், நிறுவனங்கள் பதிவு கட்டணம் ஏதுமின்றி தொழிலாளா் துறையின் இணையவழி முகவரியில் தங்களது கடைகள், நிறுவனத்தின் விவரங்களை அறிவிப்பு படிவம் இசட்.பி.-இல் ஓராண்டுக்குள் அனுப்ப வேண்டும்.
அதை சரி பாா்த்தவுடன் தொடா்புடைய ஆய்வாளரால் பதிவு சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.