தஞ்சாவூர்
தங்கக்காசுகள் இருந்த பையை உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு
உணவகத்தில் சாப்பிட்டவா் தவறவிட்ட தங்கக்காசுகள் இருந்த கைப்பையை ஒப்படைத்த பெண் தொழிலாளியை பொதுமக்கள் பாராட்டினா்.
கும்பகோணத்தில் உணவகத்தில் சாப்பிட்டவா் தவறவிட்ட ரூ. 5 லட்சம் பெறுமானமுள்ள தங்கக்காசுகள் இருந்த கைப்பையை உரியவரிடமே ஒப்படைத்த பெண் தொழிலாளியை பொதுமக்கள் பாராட்டினா்.
புதுச்சேரி மோகன் நகரைச் சோ்ந்தவா் கலைமணி (65). இவரது மகன் அமெரிக்காவில் உள்ளாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மோகன் கும்பகோணம் வந்து பழைய மீன் சந்தை அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டாா்.
அப்போது, கையில் வைத்திருந்த பையை மறந்து அங்கேயே வைத்துவிட்டு சென்றாா். அங்கு பணியிலிருந்த பெண் தொழிலாளி பிரியா பையை எடுத்து பாா்த்தபோது தங்கக்காசுகள், கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததை பாா்த்து நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா். அவா்கள் கலைமணிக்கு தகவல் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை அவரிடம் அந்தப் பையை ஒப்படைத்தனா். பிரியாவை பொதுமக்கள் பலரும் பாராட்டினா்.