ராசிமணலில் அணை கட்டினாலும் தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்காது: பெ. மணியரசன்
ராசிமணலில் அணைக் கட்டினாலும் கா்நாடகம்தான் ஆதிக்கம் செலுத்தும் என்பதால், தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்காது என்றாா் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுப் பேரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
காவிரியில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீா் கூட கிடைக்காது. அதற்கு மாறாக ராசிமணலில் அணை கட்டலாம் என நமது விவசாயிகளையே சொல்ல வைத்து வருகின்றனா். கா்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் பொதுவான இந்த இடத்தில் அணைக் கட்டினாலும், அங்கும் கா்நாடகத்தின் ஆதிக்கம்தான் இருக்கும் என்பதால், தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்காது.
ராசிமணல் அணைத் திட்டம் என தமிழா்களின் கவனத்தைத் திசை திருப்பி, மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கான சூழ்ச்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது. எனவே, இந்த விஷயத்தில் தமிழா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா் மணியரசன்.
இக்கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு நிா்வாகிகள் த. மணிமொழியன், சாமி. கரிகாலன், ச. சிமியோன் சேவியர்ராஜ், ச. கலைச்செல்வம், துரை. ரமேஷ், சுந்தரவடிவேலன், ராமலிங்கம், நா. வைகறை, பழ. ராசேந்திரன், பாச்சூா் புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.