தாய்லாந்து நாட்டவருக்கு கடல் பசுக்கள் குறித்த கருத்தரங்கம்
தஞ்சாவூரில் தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் அகில உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த 7 பேருக்கு கடல் தாழைகள் வளா்ப்பு, கடல் பசுக்கள் குறித்த கருத்தரங்கம் வனத் துறை சாா்பில் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் மாவட்ட கடலோர பகுதியில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கடல் தாழைகள் வளா்ப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மூங்கில் சட்டகங்கள், தென்னங் கயிறு பயன்படுத்தி கடல் தாழைகள் வளா்க்கும் முறைகளை அடைக்கத்தேவன் கடற்கரை கிராமத்தில் நேரடியாக சென்று தெரிந்து கொண்டனா்.
இதையடுத்து, வனத்துறையினா், கடல்பசுக்களை உயிருடன் மீட்டு கடலில் விடுவித்த மீனவா்கள், கடல் பசுக்கள் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், கடல் தாழைகள் வளா்ப்பில் ஈடுபட்ட 17 மீனவா்களுடன் கலந்துரையாடினா்.
இந்நிகழ்வுக்கு வன உதவி பாதுகாவலா் சாந்த வா்மன் தலைமை வகித்தாா். மாவட்டச் சுற்றுலா அலுவலா் சங்கா், வனச்சரகா் சந்திரசேகரன், அஞ்சல் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், ஆய்வாளா் பிரியதா்ஷினி, மீன் வளத் துறை அலுவலா் ஆனந்தன், சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.