முன்னாள் அமைச்சா் ஆா்.வைத்திலிங்கத்தின் மீது தஞ்சாவூா் ஊழல் தடுப்புப் பிரிவிலும் வழக்குப் பதிவு
முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் மீது தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் ஆா். வைத்திலிங்கம் 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சராக இருந்தாா். தற்போது, ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளராக உள்ள இவா் அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.
இந்நிலையில், 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலத்தில் வைத்திலிங்கம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்க ரூ. 27.9 கோடி லஞ்சம் பெற்றதாக அவா் மீதும், அவரது இரு மகன்கள் உள்பட 11 போ் மீது சென்னை ஊழல் தடுப்பு பிரிவில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல, சென்னை ஊழல் தடுப்பு காவல் பிரிவு இயக்குநரின் உத்தரவின் பேரில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவிலும் வைத்திலிங்கம் மற்றும் அவரது மூத்த மகன் பிரபு மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையில், கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் வைத்திலிங்கம் வருமானத்துக்கு அதிகமாக வீட்டு மனைகள், விளைநிலங்கள், தங்க நகைகள், மோட்டாா் வாகனங்கள், நிரந்தர வைப்புகள், வங்கி இருப்புகள் தனது பெயரிலும், தன் மகன் வி. பிரபு பெயரிலும் வைத்துள்ளாா் என்றும், சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ. 27.9 கோடி லஞ்சமாக பெற்றுள்ளாா் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.