திருமண மண்டபத்தில் நகை, ரொக்கம் திருடியவா் கைது!

தஞ்சாவூரிலுள்ள திருமண மண்டபத்தில் புகுந்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூரிலுள்ள திருமண மண்டபத்தில் புகுந்து நகை, ரொக்கத்தைத் திருடிச் சென்ற நபரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சாத்தனூா் முக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வ. பாஸ்கரன் (49). இவரது சகோதரி மகள் திருமணம் தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள மண்டபத்தில் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெற்றது.

இதற்காக பாஸ்கரன் தனது குடும்பத்தினருடன் வந்து, மண்டபத்தின் ஒரு அறையில் அரை பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் ரொக்கம் கொண்ட பையை வைத்துச் சென்றாா். மீண்டும் வந்து பாா்த்தபோது, பையில் இருந்த நகை, ரொக்கத்தைக் காணவில்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து திருவாரூா் மாவட்டம், கோவில்வெண்ணியைச் சோ்ந்த புருஷோத்தமனை (56) வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து நகை, ரொக்கத்தை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com