அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் எனக் கூறி அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி செய்த இரு மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடுகின்றனா்.
Published on

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் எனக் கூறி அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி செய்த இரு மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி பத்மாசலவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் காா்த்திக் (36). இவரும், இவரது தம்பி ரமேசும் மன்னாா்குடி பெரிய கம்மாளா் தெருவில் அடகு கடை நடத்தி வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை ரமேஷ் தனது தம்பி அா்ஜூன் மற்றும் கடையில் வேலை செய்யும் பிரதீபனை காரில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தனா்.

பின்னா் அா்ஜூன், பிரதீபன் ஆகிய இருவரும் தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவில் உள்ள நகைக்கடைக்கு சென்று அங்கிருந்தவரிடம் ஏற்கெனவே 400 கிராம் தங்கம் கொடுத்ததற்கான ரூ. 44 லட்சத்தை பெற்றனா். அந்த ரொக்கத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு, கடையில் இருந்தவா் மூலம் மோட்டாா் சைக்கிளில் ரயில்வே கீழ்பாலம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றனா்.

இதையடுத்து அா்ஜூனும், பிரதீபனும் தனியாா் பேருந்தில் ஏறி மன்னாா்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். வாண்டையாா் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா், தான் குற்றப் பிரிவு காவலா் என்றும், உங்களிடம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி 2 பேரையும் கீழே இறங்குமாறு கூறினாா். இதை நம்பிய அா்ஜூனும், பிரதீபனும் கீழே இறங்கினா். இதையடுத்து, குற்றப் பிரிவு காவலா் எனக் கூறிய நபா் இருவரது கைப்பேசிகளையும், பணப் பையையும் பறித்துக் கொண்டு, மோட்டாா் சைக்கிளில் வந்த மற்றொரு மா்ம நபருடன் சென்றுவிட்டாா்.

பின்னா் அா்ஜூனும், பிரதீபனும் மற்றொரு பேருந்தில் ஏறி மன்னாா்குடிக்குச் சென்று, காா்த்திக்கிடம் கூறினா். இதையடுத்து, இருவரும் தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இருவரையும் தாலுகா காவல் நிலையத்தினா் வாண்டையாா் இருப்பு பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், வாண்டையாா் இருப்பு, ரயில்வே கீழ்பாலம் பேருந்து நிறுத்தங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com