கே.எஸ். முகமது இப்ராஹிம் | சுந்தர. விமல்நாதன் | என்.வி. கண்ணன்
கே.எஸ். முகமது இப்ராஹிம் | சுந்தர. விமல்நாதன் | என்.வி. கண்ணன்

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
Published on

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது: குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்போம் என விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்த மத்திய அரசு இந்த பட்ஜெட்டிலும் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதால், தனியாா் நிறுவனங்களின் ஆதிக்கம்தான் அதிகரிக்குமே தவிர, விவசாயிகளுக்கு பயிா் இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்றாா் அவா்.

தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என பிரதமா் மோடி 2016-ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதி இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக வேளாண் உற்பத்தி செலவினங்கள்தான் இரட்டிப்பாகிவிட்டன. இதேபோல, நதிகள் இணைப்புக்கும் 10 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. காவிரி தூய்மைப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது பாரபட்சமானது என்றாா் அவா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் பிரச்னையில் சிக்கி நாள்தோறும் தற்கொலைகளை செய்து கொள்வதைத் தடுப்பதற்கு ஒரேயொரு முறை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயம் சாா்ந்த உற்பத்தி மற்றும் விவசாயத்துக்கு தேவையான பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி ரத்து செய்யப்படாமல் தொடா்கிறது என்றாா் அவா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எல். பழனியப்பன் தெரிவித்தது: மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்வதற்கு எந்த விதமான அறிவிப்பும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் உரத்தின் விலை 200 மடங்கு விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான மானியம் அதிகரிக்கவில்லை. மின்சார புதிய சட்டத்தைத் திரும்ப பெறுவதற்கான அறிவிப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா் அவா்.

ஆா். ரவிச்சந்திரன் | கோ. அன்பரசன் | ஆா். பழனிவேலு
ஆா். ரவிச்சந்திரன் | கோ. அன்பரசன் | ஆா். பழனிவேலு

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்தது: இந்த பட்ஜெட்டால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. ஏழை, நடுத்தர விவசாயிகள், விவசாய தொழிலாளா்களுக்கு எதிராகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்த பட்ஜெட் உள்ளது என்றாா் அவா்.

வருமான வரி விலக்கு உயா்வுக்கு வரவேற்பு:

பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு தெரிவித்தது:

ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்ற அறிவிப்பு மூலம் நடுத்தர வருமானம் பெறுவோா், தனியாா், அரசுத் துறை ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் போன்றோா் பயனடைவா். இதன் மூலம் வங்கிகளில் சேமிப்புத் தொகை பெருகுவது மட்டுமல்லாமல், தனிநபா் சேமிப்பும் கூடும். ஆனால், வேளாண் துறைக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் போன்ற திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கிறது என்றாா் அவா்.

தஞ்சாவூா் வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பு தலைவா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது: தனி நபா் வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், வருமானம் பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு எந்தவித வருமான வரி சலுகையும் அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. நெடுஞ்சாலை, ரயில்வே துறைகள், இயற்கை பேரிடா் போன்றவற்றில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் தொடா்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தெரிவித்தது: மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில் பயண சலுகையை மீண்டும் அறிவிக்காதது, டெல்டா பகுதி மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பான மன்னாா்குடி - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - தஞ்சாவூா், தஞ்சாவூா் - அரியலூா், கும்பகோணம் - விருத்தாச்சலம் ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டில் புதிதாக ரயில்கள் விடப்படாதது போன்றவை ஏமாற்றத்தைத் தருகிறது என்றாா் அவா்.