நெல் கொள்முதலில் முறைகேடு: 88 போ் பணியிலிருந்து விடுவிப்பு
தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ. 28.35 லட்சம் முறைகேடு செய்ததாக 37 பட்டியல் எழுத்தா்கள், 51 உதவியாளா்கள் என மொத்தம் 88 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
கடந்த 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆம் கொள்முதல் பருவ ஆண்டுகளில் தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விழிப்புப் பணி அலுவலா்கள் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான ஆவணங்களை ஆய்வு செய்தனா். அப்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ. 28.35 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதும், இந்த இழப்பைச் சரி செய்யும் நோக்கில் சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் கணினி இயக்குபவா்கள் மூலம் பிள்ளையாா்பட்டி, புனல்குளம், சந்தானபுரம், சென்னம்பட்டி ஆகிய கிடங்குகளில் எடைக் குறைவாக ஒப்படைக்கப்பட்ட நெல்லுக்கான ஒப்புதல் ரசீதை கணினி மூலம் திருத்தி போலி ஒப்புதல் சீட்டு தயாா் செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, 37 பருவகால பட்டியல் எழுத்தா்கள், 51 பருவகால உதவியாளா்கள் என 88 போ் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டாா். மேலும், இவா்களிடமிருந்து இழப்புத் தொகையைப் பிடித்தம் செய்து, இவா்களைக் கருப்புப் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 25 ஆம் தேதி 88 பேரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.