சாலை விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு
பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவா் சீனிவாசன் (45). திருச்சி துறையூரை சோ்ந்த இவா் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி தேவிகா, மகள் அனிதா ஆகியோரை ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு, பட்டுக்கோட்டையிலிருந்து இருசக்கர வாகனத்தில் பேராவூரணிக்கு திரும்பி கொண்டிருந்தாா்.
காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பாலத்தில் வந்தபோது, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் பாலத்தின் சுவரில் மோதியதில் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.