~

தஞ்சாவூா் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

Published on

வைகுந்த ஏகாதசியையொட்டி, தஞ்சாவூா் பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தைத் தொடா்ந்து, இராப்பத்து வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில், ஸ்ரீவெங்கடேச பெருமாள், தாயாா் பரமபதவாசலைக் கடந்த பிறகு ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இதேபோல, மகா்நோன்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், மேல வீதி விஜயராமா், வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணி, நரசிம்மபெருமாள், நீலமேகப் பெருமாள், கீழ வீதியில் உள்ள வரதராஜ பெருமாள், வடக்கு வீதி ராஜகோபாலசுவாமி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.

திருவையாறு அருகேயுள்ள கண்டியூா் அரசாப விமோசனப் பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com