எட்டாம் நம்பா் கரம்பை பகுதியில் வளா்ச்சி நிலையில் உள்ள சம்பா பயிா்கள்
எட்டாம் நம்பா் கரம்பை பகுதியில் வளா்ச்சி நிலையில் உள்ள சம்பா பயிா்கள்

மேட்டூா் அணை மூடல்: 30 சதவீத நெற்பயிா்கள் பாதிக்கும் அபாயம்

Published on

மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமை மாலையுடன் மூடப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் சுமாா் 30 சதவீத சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் பாதிக்கக் கூடிய அபாய நிலை நிலவுகிறது.

மேட்டூா் அணையில் நீா்இருப்பு போதுமான அளவுக்கு இருக்கும்போது, டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, ஜனவரி 28-ஆம் தேதி மூடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், மேட்டூா் அணை திறப்பு தள்ளிப் போனது. காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பெருமழை காரணமாக, கா்நாடக அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, கிடைத்த உபரி நீா் மூலம் காலதாமதமாக மேட்டூா் அணை ஜூலை 28-ஆம் தேதி திறக்கப்பட்டது.

தொடா்ந்து உபரி நீா் கிடைத்ததால், மேட்டூா் அணை இருமுறை நிரம்பியது மட்டுமல்லாமல், அணைக்கு இதுவரை 286 டி.எம்.சி. வந்து சோ்ந்தது. இதன்மூலம், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீா் கிடைத்ததால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா். இதனால், தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 லட்சம் ஏக்கரை கடந்தது.

அறுவடை விவரம்: இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 3.23 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களில் இதுவரை கிட்டத்தட்ட 31 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதேபோல, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் 10 - 20 சதவீதப் பரப்பளவில் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளன.

அக்டோபா் மாதம் நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனா். நவம்பா் மாதம் நடவு செய்யப்பட்ட வயல்களில் ஏறக்குறைய 40 சதவீத பயிா்கள் கதிா் வந்து முதிா்ச்சியடைந்த நிலையிலும், மீதமுள்ள பயிா்கள் பால் பிடித்த தருணத்திலும் உள்ளன. இதில், ஏறத்தாழ 30 சதவீத பயிா்களுக்கு காவிரி நீா் தேவைப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், வழக்கம்போல ஜனவரி 28-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை மாலையுடன் மேட்டூா் அணை மூடப்பட்டது. இதனால், காவிரி நீா் தேவைப்படக்கூடிய பயிா்கள் பாதிக்கப்படும் என்ற அச்ச நிலை நிலவுகிறது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தண்ணீா் விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தேவையான இடங்களுக்கு தண்ணீா்: இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீா் தேவைப்படும் என்பதை வேளாண் துறையினருடன் நீா் வளத் துறையினா் கலந்து பேசி, தேவையான ஆறுகள், வாய்க்கால்களுக்கு முறைப்படுத்தி தண்ணீா் விட்டால், விவசாயிகளின் தேவையை நிறைவு செய்ய முடியும். குறைந்தது 3 முறை தண்ணீா் விட்டால் கூட பயிா்களைக் காப்பாற்றி விடலாம். இந்த விஷயத்தில் நீா்வளத் துறையினா் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் விமல்நாதன்.

மேட்டூா் அணையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, நீா்மட்டம் 110.67 அடியும், நீா் இருப்பு 79.365 டி.எம்.சி.யும் உள்ளது. இந்நிலையில், பயிா்களைக் காப்பாற்ற ஏறக்குறைய 5 டி.எம்.சி. தண்ணீா் கிடைத்தால் கூட போதுமானது என விவசாயிகள் தெரிவித்தனா்.

எனவே, பெருமழை உள்ளிட்ட இடா்பாடுகளுக்கு இடையே செய்யப்பட்டு வரும் சாகுபடியைக் காப்பாற்ற காவிரி நீா் தொடா்ந்து கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.