ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்துகரையில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டுள்ளதை எதிா்த்து, அதே ஊரைச் சோ்ந்த கணேசன் என்பவா் மதுரை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் உடனடியாக நீா் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் ஒரத்தநாடு வட்டாட்சியா் சுந்தரச்செல்வி வட்டாட்சியா்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் ஆக்கிரமிப்பாளா்களின் வழக்குரைஞா் வட்டாட்சியரிடம் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆகையால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com