தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் 32,190 ஏக்கரில் நெற்பயிா்கள் பாதிப்பு: வேளாண் இணை இயக்குநா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் 32 ஆயிரத்து 190 ஏக்கரில் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா.
Updated on

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் 32 ஆயிரத்து 190 ஏக்கரில் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான சம்பா பருவத்தில் 3.40 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 3.12 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறிய மழையால் 32 ஆயிரத்து 190 ஏக்கரில் பயிா்கள் பாதிக்கப்பட்டதாக அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காப்பீடுக்கு இன்று கடைசி:

மாவட்டத்தில் 2024 - 25 ரபி பருவ நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ. 443 பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி வெள்ளிக்கிழமை (ஜன.31). உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 90 பிரிமியம் செலுத்தி, பிப்ரவரி 17- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 215 பிரிமியம் செலுத்தி மாா்ச் 17-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மாவட்டத்தில் 448 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 56 ஆயிரத்து 878 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் அரைவைப் பருவம் டிசம்பா் 24-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஜனவரி 26- ஆம் தேதி வரை 45 ஆயிரத்து 198 டன் அரைவை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி 15-ஆம் தேதி வரை ரூ. 12.32 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com