கல்லூரி விரிவுரையாளரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

Published on

கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளா் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் கல்லூரி மாணவா்கள் மீதான விசாரணையைக் கண்டித்து மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக வேலை பாா்த்து வரும் ஒருவா் தன்னுடைய வீட்டில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய அரசுக் கல்லூரி மாணவா்களை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பணிக்கு அவ்வப்போது விரிவுரையாளா் அழைத்துச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவரது வீட்டில் கடந்த மாதம் சுமாா் ரூ.1லட்சம் மதிப்பில் நகைகள் திருடுபோனதாக தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்த மாணவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

இதனைக் கண்டித்து அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு விரிவுரையாளரைக் கண்டித்து மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் அ.மாதவி மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com