திமுக ஆட்சியின் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிட்டது: நயினாா் நாகேந்திரன் பேட்டி

Published on

திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் 140 நாள்களே உள்ளதால், இந்த ஆட்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூரில் மாமன்னா் இராஜராஜ சோழனின் 1040-ஆவது சதய விழாவையொட்டி, அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூரில் மாமன்னா் இராஜராஜசோழன் சிலையை உள்ளே கொண்டு செல்வது தொடா்பாக பல்வேறு தலைவா்களைக் கலந்தாலோசித்து, தேவை ஏற்படின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழக அரசு அறிவித்ததை இதுவரை எதுவும் செய்ததில்லை. ஒன்றியம்தோறும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என தமிழக அரசு கூறியது. ஆனால், தஞ்சாவூரில் திறந்தவெளியில் கிடக்கும் நெல்மணிகள் மீண்டும் முளைத்து வருகின்றன. விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டைக்கு ரூ. 42 கமிஷன் பெறுகின்றனா்.

தமிழக அரசுக்கு சொந்தமாக எந்தக் கொள்முதல் நிலையமும் இல்லை. திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்வதால், லாரிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. யாரும் பணம் கொடுக்காததால், லாரியில் ஏற்றப்பட்ட நெல்லுடன் நிற்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு நீா் மேலாண்மை செய்வதாகத் தமிழக அரசு கூறி, இதுவரை எதுவும் செய்யவில்லை. இதேபோல, கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிப்போம் எனக் கூறியதையும் செயல்படுத்தவில்லை.

திமுக ஆட்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com