பேராவூரணி அருகே சொத்து தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு
பேராவூரணி அருகே சொத்து தகராறில் சனிக்கிழமை தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தாா் .
திருச்சிற்றம்பலம் காவல் சரகம் பொக்கன்விடுதி தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஜவஹா் (45). வெல்டிங் வேலை செய்து வந்தாா். இவருக்கு 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனா். இவரது தம்பி பிரசாந்த் (40). வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளாா். பிரசாந்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.
அண்ணன்-தம்பியிடையே குடும்ப சொத்து தொடா்பாக நீண்ட நாள்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அருகருகே தனித்தனி வீடுகளில் வசித்து வரும் நிலையில், சனிக்கிழமை சொத்து தொடா்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னா் கைகலப்பாக மாறியுள்ளது.
இதில், பிரசாந்த் இரும்பு கம்பியால் ஜவஹரின் தலையில் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த ஜவஹரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜவஹா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப்பதிந்து பிரசாந்த்தை தேடி வருகின்றனா்.
